வன்முறை செய்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசு : மம்தா தாக்குதல்

Must read

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே பிரசாரத்தை முடிக்க சொன்னது பாஜகவுக்கு தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோதமான பரிசு என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

வரும் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.    மேற்கு வங்கத்தில் இதற்காக நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.  இந்த பிரசாரத்தில் அமித்ஷா நடத்திய சாலைப் பேரணியில் கடும் கலவரம் ஏற்பட்டது.   பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த வன்முறையில் ஏராளமான தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தன.   மேற்கு வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது.   இந்த சிலை உடைப்பை திருணாமுல் காங்கிரஸ் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.   ஆனால் பாஜகவினர் செய்ததாக  வீடியோ ஆதாரத்துடன் திருணாமுல் காங்கிரஸ் புகார் அளித்தது.

இவ்விரு கட்சிகளின் வன்முறையால் தேர்தல் ஆணையம் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே அதாவது இன்றுடன் முடித்துக் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.   இதனால் அதிருப்தி அடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாதபடி தேர்தல் ஆணையம் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே நிறுத்தி உள்ளது.  இது சட்டத்துக்கு புறம்பானது.

சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பிரசாரத்தை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது.   இது ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்தமைக்கு தேர்தல் ஆணயம் பாஜகவுக்கு  அளிக்கும் பரிசாகும்.  வன்முறைய தூண்டிய பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பிரசாரத்தை முன்கூட்டியே நிறுத்தியதன் மூலம் சட்டவிரோத பரிசு அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article