சென்னை: சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்துங்கள் என தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீதான அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிகை, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறைச் செயலாளர் அமுதா, நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பாதை பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர், பருவமழை இரு தினங்களில் தொடங்க உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சாலைப் பணிகளை நிறுத்துமாறு சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். பருவமழை முடிந்த பின்னர் மீண்டும் தொடங்கலாம் என்று கூறினார்.
மேலும், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், மெட்ரோ பணிகளையும் பருவமழை முடிந்த பின்னர் தொடங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.