சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து ரேசன் அரிசிகள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து ரேசன் அரிசி தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் வாகனங்கள் மட்டுமின்றி ரயில்கள் மூலமாகவும் கடத்தப்படுகிறது. ரேசன் கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கபட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றும், வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிகஅளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளதுடன், கடந்த 16 மாதத்தில் 13 வழக்குகள் தனது குப்பம் தொகுதியில் பதிவாகி உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தல் சகஜமாக நடைபெறுகிறது என்பதை ஆந்திர முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.