புதுடெல்லி :
சுற்றுசூழல் தாக்க மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதியிருப்பது :
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஒரு சமூகக் கடமை உள்ளது; அதனால் இந்த EIA 2020 வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.
சுற்றுசூழல் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள இந்திரா பரியவரன் பவனில் சமஸ்கிருத சொற்களான “பிரகிருதி ரக்ஷதி ரக்ஷிதா” என்ற வாசகம் பார்வையாளர்களை வரவேற்கும், இதற்கு “இயற்கையைப் பாதுகாத்தால் அது உங்களை பாதுகாக்கும்” என்பது பொருளாகும்
இந்திரா காந்தியை அவரது வாழ்நாள் முழுவதும் இந்த ஞானம் தான் ஊக்கப்படுத்தியது, அவரது பல கடிதங்கள் மற்றும் கோப்புகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையோடு ஆழ்ந்த உறவைப் பகிர்ந்து கொண்டார், வறுமையை ஒழிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உலகளாவிய பரவல் மற்றும் பேரழிவு முழு உலகிற்கும் ஒரு எச்சரிக்கையாகும். அனைவருக்கும் நல்ல ஆரோகியமான வாழ்வை வழங்க தேவையான பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இணைந்து செயல்படவேண்டும்.
இயற்கை வளத்தில் பரவலான பன்முகமும், சமத்துவமின்மையும் கொண்ட இந்தியாவில் இதுகுறித்து இப்போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நமது தேசத்தின் சுற்றுச்சூழலையும் உரிமைகளையும் நமது மக்கள் தியாகம் செய்துள்ளனர். தேச முன்னேற்றத்திற்க்காக மக்கள் நிச்சயமாக சில தியாகங்களை செய்தாகவேண்டும், ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. ஆனால் இந்திய அரசு கடந்த ஆறு ஆண்டுகளில், எந்தவிதமான கொள்கையோ, சிந்தனையோ அல்லது நோக்கத்துடனோ செயல்படவில்லை, மாறாக நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைத்துவிட்டது.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு அறிக்கையில் இந்தியா தொடர்ந்து கடைசி நிலையிலேயே உள்ளது. 2018-ம் ஆண்டு 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் – சுற்றுச்சூழல், சுகாதாரக் கொள்கை, பல்லுயிர் மற்றும் வாழ்விடங்கள், காற்று மற்றும் நீர் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அனைத்து குறியீட்டிலும் இந்தியாவுக்கு 177 வது இடம் தான் கிடைத்தது.
தற்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய தொற்றுநோய், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தை பேணுவதில் அரசுக்கு இருக்கும் அக்கறையையும் கடமையையும் பிரதிபலிப்பதாகவும் மறுபரிசீலனை செய்வதாகவும் இருந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, சரியான பொது ஆலோசனைகள் இல்லாமல் ஊரடங்கு நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன் நிலக்கரி சுரங்கம் அமைக்க தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஏலம் கோர பிரதமர் தற்போது அனுமதி வழங்கியிருப்பது அரசு சரியான மனநிலையில் இல்லை என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்ல சுற்றுசூழல் விதிகளை மீறி மாசுபடுத்துபவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த வரைவு மசோதாவில் செய்யப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்த அனுமதியளிப்பதாகவே உள்ளது.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வுகளை பார்க்கும் அனைவருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையாக தெரியும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசையும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக, 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு. மோடி அவதூறு கூறிவந்தார்.
பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல், தொழில் துறையினருக்கு ஏற்ற சிறந்த இடமாக இந்தியாவை உலகுக்கு முன்னிறுத்துவதையே இந்த அரசு ஆரம்பத்திலிருந்து தீவிரமாக செய்து வருகிறது.
ஒரு சில தனியார் தொழில்துறையினரின் பயன்பாட்டுக்கு பரந்து விரிந்த நிலப்பரப்பை திறந்துவிட்டதோடு, பல்வேறு நிலை குழுக்களை உருவாக்கி, விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் நீர்த்துப்போகச் செய்துள்ளது.
ஆறு முக்கிய சுற்றுச்சூழல் சட்டங்களை மறுஆய்வு செய்ய 2014-ல், டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) 2011 அறிவிப்பை, திருத்துவதற்கு மற்றொரு குழு அமைக்கப்பட்டது.
இந்த இரு குழுக்களும் துறை சார்ந்த பலருடன் கலந்தாலோசிக்கவில்லை மற்றும் வெளிப்படை தன்மையில்லாமல் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
டி.எஸ்.ஆர் கமிட்டி அறிக்கை ஒருபோதும் வெளியிடப்படவில்லை, ஆனால் அதன் சில பரிந்துரைகள் மறைமுகமாக செயல்படுத்தப்பட்டன. இதேபோன்று, 2018 சி.ஆர்.இசட் அறிவிப்பை, மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்றும், 7,500 கி.மீ நீளமுள்ள இந்தியாவின் கடற்கரையோரத்தில் கடலோர சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதற்காகவும், தேசிய மீன்வளத் தொழிலாளர்கள் மன்றம் மற்றும் பிற அமைப்பினர் நிராகரித்தனர்,
இந்த சமூகங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு ₹ 50,000 கோடிக்கு மேல் பங்களிக்கின்றன. பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்படும் இவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை.
அதேபோல், வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம், வன ஆலோசனைக் குழு மற்றும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள திட்டங்களுக்கும் உரிய செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒப்புதல் அளித்து வருகின்றன.
வட இந்திய சமவெளிகளும் தேசிய தலைநகர பிராந்தியமும் ஆண்டுதோறும் மோசமான புகைமூட்டத்தில் மூழ்கியுள்ளன. பிரிட்டிஷ் பத்திரிகையான தி லான்செட்டில் ஒரு ஆய்வின்படி, 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 12.4 லட்சம் இறப்புகள் அதாவது 12.5% இறப்புகள் காற்று மாசுபாட்டால் ஏற்படடுகிறது என்று கூறியிருந்தது.
பொது சுகாதாரத்தை சீரமைக்க தேவையான எந்தவொரு அவசர தீர்வும் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மாறாக, அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதிலும், தரமான நிலக்கரியை பயன்படுத்தும் கொள்கையிலிருந்தும் பின்வாங்கி வருகிறது.
ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரின் நில மற்றும் வனப் பகுதிகள் மீது அரசு மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய தாக்குதல் இது. பல நூற்றாண்டுகளாக இவர்கள் மீது தொடுக்கப்பட்ட அநீதியை சீர்செய்ய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க வன உரிமைகள் சட்டம் (எஃப்ஆர்ஏ), 2006-ஐ நிறைவேற்றியது.
உலகம் முழுவதிலும் இருந்து நாம் கற்ற அனுபவங்கள் மற்றும் நமது ஆழ்ந்த கலாச்சார மரபுகள், இவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட நில உரிமைகள் வழங்குவதே சுற்றுச்சூழலையும் இந்த இனத்தையும் அழிவிலிருந்து மீட்க உதவும் என்பது நிரூபணமாகிறது.
எஃப்.ஆர்.ஏ 2006 ல் மேற்கொள்ளப்பட்ட மோசமான திருத்தங்களும் விளக்கங்களும், ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் வனத்துறையினரால் துன்புறுத்தப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. நிலத்தின் மீதான அவர்களின் சட்டப்பூர்வ உரிமையை அதிகாரத்தால் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
திட்ட ஒப்புதல்களுக்கான எஃப்ஆர்ஏ இணைப்பு நடைமுறை கைவிடப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக குரல் எழுப்புவதை தடைசெய்யும் விதமாக பொது ஆலோசனைகளை குறைத்தல் அல்லது நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்திரா காந்தி ஒருமுறை வன மேம்பாட்டு நிறுவனங்கள் வன அழிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன என்று கூறியிருந்தார்.
ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களே அவரது கூற்றின் வெளிப்பாடுகள்.
காலனித்துவ இந்திய வனச் சட்டம், 1927-ஐ மாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு வனப் பாதுகாப்பு மற்றும் நீதி வழங்க அதிகாரம் அளித்ததுடன் வன அதிகாரிகளுக்கு வரைமுறையுடன் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அதிகாரமளித்து மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை உதாரணமாக கூறலாம்.
முன்னதாக, 2016-ல் காடு வளர்ப்பு இழப்பீட்டு நிதி சட்டம் என்ற சட்டத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோடி அரசு நிறைவேற்றியது, இது எஃப்.ஆர்.ஏ, 2006-ல் கூறப்பட்டுள்ள விதிகளை புறக்கணிப்பதாக உள்ளதோடு, ஆதிவாசிகள், பழங்குடியினரின் உரிமைகளையும் அவர்களின் கிராம சபைக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும் பறிக்கிறது.
சீர்திருத்தம் என்ற பெயரில் அரசுடன் நெருக்கமாக இருக்கும் பெரு முதலாளிகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது, பாதிக்கப்படக்கூடிய மக்களை அவர்களே உணராத வகையில் புறக்கணித்துள்ளது. அதுமட்டுமல்ல, உள்நாட்டு மற்றும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான தனது கடமையையும் பொறுப்பையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சமூகக் கடமை இருப்பதை அரசு உணர வேண்டும்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பானது சுமை அல்ல, சுற்றுசூழல் தொடர்பான அனுமதி பெறுவது எப்படி என்ற மனநிலையில் இருந்து சுற்றுசூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழில்துறையினரை ஊக்கப்படுத்தவேண்டும்.
பசுமை விதிமுறைகளைப் பின்பற்றும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) மானியம் வழங்க வேண்டும்.
இந்தியாவுக்கு நவீன EIA கட்டமைப்பு தேவை என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது அறிவியல் பூர்வமாக இருக்கவேண்டும், பொது மக்களின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும், தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
ஆனால் அது கிடைக்கக்கூடிய சிறந்த அறிவியல் அறிவு, மேம்பட்ட பொது பங்கேற்பு மற்றும் வழக்கமான சமூக தணிக்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
ஒரு பிராந்தியத்தில் அல்லது சுற்றுச்சூழலில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கவேண்டும் – உதாரணமாக கங்கை
மாசுபடிந்த கங்கையாக இல்லாமல் புனித கங்கையாக இருக்கவேண்டும்.
எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
EIA 2020 வரைவு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
புவி வெப்பமடைதல் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிகாணும் நோக்கில் ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்க வேண்டும் அதற்காக தேசிய அளவில் பொது ஆலோசனை நடத்துவது அவசியம்.
இந்தியாவை பசுமை உற்பத்தி மையமாக மாற்றவும் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், உலகுக்கு இந்தியாவின் சிறப்பை நிரூபிக்கவும் நமக்கான வாய்ப்பு இது.
குறைந்த கார்பன் வெளியேற்றும் நடைமுறை குறித்த முந்தைய திட்டக் குழுவின் நிபுணர் குழு அறிக்கை மற்றும் 2019 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகள் இதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இருக்கலாம்.
மக்கள் மீள் குடியேறும் காலங்களில், இளைஞர்கள், பெண்கள், கிராம சபைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களைக் கொண்டு காடு வளர்ப்பு மற்றும் நீர்நிலை மேம்பாடு உள்ளிட்ட பொதுப்பணித் திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
உலகம் எதிர்கொள்ளும் சுற்றுசூழல் நெருக்கடி குறித்து முதலில் குரல் கொடுத்த உலகத் தலைவர் இந்திரா காந்தி, ஜூன் 1972 இல் ஸ்டாக்ஹோமில் நடந்த மாநாட்டில் இது குறித்து பேசினார். இப்போது, 21ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சந்தித்திருக்கும் இந்த மிகப்பெரிய சவாலில் இருந்து மீண்டுவருமா ?
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
– நன்றி தி இந்து