Stop creating ‘pure veg’ societies: Raj Thackeray to Mumbai developers

 

மும்பையில், சுத்த சைவம் சாப்பிடுவோர் மட்டுமே குடியிருப்பதற்கான ப்ளாட்டுகளை கட்டி விற்பனை செய்வதை கட்டுமான நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மகாராஷ்ட்ரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கட்டுமான நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” அசைவம் சாப்பிடுவதால் சிலருக்கு புதிய ப்ளாட்டுகளை விற்பனை செய்ய கட்டுமான நிறுவனங்கள் மறுப்பதாக எங்களுக்கு புகார்கள் வருகின்றன. கட்டுமான நிறுவனங்கள் இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், சைவம் அசைவம் என்றில்லாமல் அனைவருக்கும் வீடுகளை விற்பனை செய்வோம் என்ற உறுதி மொழிக்கடிதத்தை நகரின் முன்னனி கட்டுமான நிறுவனங்கள் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறினால். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் பணிகளை அந்த இடங்களுக்கே சென்று தடுத்து நிறுத்துவோம். தக்க பாடத்தை புகட்டத் தயங்க மாட்டோம்’ என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு வீடு விற்பனை செய்ய மறுக்கும் விவகாரத்தில், கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் எந்த வழிவகைகளும் இல்லை என மும்பை பெருநகராட்சி நிர்வாகம் கூறிவிட்டது. அரசு தரப்பில் இவ்வாறு கைவிரிக்கப்பட்டதால் , மகாராஷ்ட்ர நவ நிர்மான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பதாக ராஜ்தாக்கரேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், குஜராத்திகள், மார்வாரிகளின் வாக்குகளை பாஜக – சிவசேனா கூட்டணி வாங்கிவிடுவதால், மராத்தியர்களின் வாக்குவங்கியைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ள ராஜ்தாக்கரே செய்யும் தந்திரமே இது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.