சென்னை:

னியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய  ‘Stop Corona’ இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் மூலம்  கொரோனா சிகிச்சை அளிக்க காலியாக இருக்கும் படுக்கை வசதி குறித்து பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவே கண்டறிந்து கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

முன்னாள் செய்திவாசிப்பாளரும், நாடக நடிகருமான வரதராஜன் நேற்று வெளியிட்ட வீடியோ வில், தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் படுக்கை விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஸ்டாப் கொரோனா என்ற இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க காலியாக இருக்கும் படுக்கை வசதி குறித்து பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவே கண்டறிந்து கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றிற்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிக்க சில தினங்களுக்கு முன் உரிய வழிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும், அரசு  மருத்துவமனை களில் படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 08.06.2020 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 400-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனை களின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தாமாகவே சேவை மனப்பான்மையுடன் முன்வந்து அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு ஒதுக்கி இந்த பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவ மனைகளும், உடனடியாக தங்கள் மருத்துவமனைகளுக்காக ஒரு பொறுப்பு அலுவலரை  நியமிக்கவும், அவர் மூலமாக தமிழ் நாடு அரசு கொரானா தடுப்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள “stop corona” இணையதளத்தின் வாயிலாக மருத்துவமனையில் உள்ள வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கைகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை (Facility, Occupancy, Vacancy) ஆகியவற்றை அவ்வபொழுது வெளிப்படைத்தன்மையுடன் பதிவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்மூலம், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், படுக்கை வசதிகள் ஆகியவற்றை அறிந்து, சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அமையும். மேலும், இப்பேரிடர் காலத்தில் பொதுமக்களிடமிருந்து அச்சத்தை போக்கி அரசு மீதும் தனியார் மருத்துவமனைகளின் மீது ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

அமைச்சரின் கோரிக்கையை தனியார் மருத்துவமனைகள் ஒரு மனதாக ஏற்று தங்களிடம் உள்ள அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோனா நோய் சிகிச்சைக்கு ஒதுக்கீடு செய்யவும், மேற்சொன்ன இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்யவும் தங்களது இசைவினை தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மற்றும் மருத்துவத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.