சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்ததால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகஅரசு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது. முன்னதாக அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த பல்வேறு பொருட்களை வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதுதொடர்பான புகைப்படமும் செய்திகளும் வெளியாகின.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் அதிமுக அலுவலகத்துக்கு வைத்த  சீலை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று சீல் அகற்றப்பட்டு, அலுவலகத்தின் சாவி எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, எடப்பாடி தரப்பு தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்குள்ள பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டும், பீரோ டேபிள்கள் தள்ளி விடப்பட்டு அலங்கோலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான சி.வி.சண்முகம், அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை.கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமாகியுள்ளது. காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை என்று தெரிவித்தார்.

சீல் அகற்றம்; ஓபிஎஸ் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட அதிமுக அலுவலகம் – புகைப்படங்கள்