டில்லி
வார முதல் நாளான இன்றைய பங்கு வர்த்தகச் சந்தை சென்செக்ஸ் 650 புள்ளிகளிலும் நிஃப்டி 10800 புள்ளிகளிலும் தொடங்கி உள்ளன.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரின் காரணமாகப் பங்கு வர்த்தகச் சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன ஏற்றுமதிப் பொருட்களுக்குத் தொடர்ந்து வரியை அதிகரித்து வருவதால் அது உள்நாட்டுப் பங்கு சந்தையையும் சர்வதேச பங்குச் சந்தையையும் கடுமையாகத் தாக்கத்தை உண்டாக்குகிறது.
இன்றைய பங்குச் சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் 654 புளிகளுடனும் நிஃப்டி 10790 புள்ளிகளுடனும் இருந்தது. மும்பை வர்த்தகச் சந்தையில் எஸ் வங்கி, டாடா மோட்டார், வேதாந்தா குழுமம், ஸ்டேட் வங்கி, டடா ஸ்டீல் உள்ளிட்ட பல பங்குகளின் விலை 6.89% வரை வீழ்ச்சியுடன் தொடக்கம் காணப்பட்டது. சர்வதேச பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் இரும்புத் தொழில் நிறுவனப் பங்குகளைத் தவிர மற்றவைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தை ஆர்வலர்கள் இந்த சரிவுக்கு அமெரிக்க சீனா வர்த்தக போர் மட்டுமின்றி இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாறுதலும் முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து முதலீட்டாளர்கள் வரி விதிப்பு குறித்த நிதி அமைச்சக அறிவிப்புக்களை கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதில் மாறுதல் இருப்பதைப் பொறுத்து முதலீடுகளிலும் மாறுதல்கள் காணப்படுகிறது.