சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கச்சாஎண்ணை, எரிவாயு எடுக்க ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தமிழகஅரசிடம் அனுமதி கோரி யுள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள், புதுக்கோட்டை, நாகை போன்ற மாவட்டங்கள் எண்ணை வளம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், அங்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் கச்சா எண்ணை, எரிவாயு எடுக்க மத்தியஅரசு தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், கச்சா எண்ணை எடுக்க தொடங்கினால் அந்த பகுதி முழுவதும், எண்ணை படலம் ஏற்பட்டு, அந்த நிலங்கள் விவசாயம் செய்ய லாயக்கற்றதாக மாறிவிடுகிறது. இதனால், கச்சா எண்ணை எடுக்க விவசாயிகளும் பொதுமக்களும் அனுமதிப்பதில்லை. அதைத்தொடர்ந்து, பல பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் துணைநிறுவனமான கெய்ர்ன் ஆயில் அண்டு கேஸ் நிறுவனம் இதற்கான அனுமதி கோரி உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் தொழிலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது வேதாந்தா நிறுவனம். இந்நிறுவனம், தமிழகத்தில் சில எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் 102 எண்ணெய் கிணறுகளை அமைத்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும்இ நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை ஒட்டிய கடலோர பகுதிகளில் 137 கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதையும் அக்கடிதத்தில் வேதாந்தா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது தனியார் நிறுவனமான வேதாந்தா அதே பகுதிகளில் கடலோர பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி கோரியுள்ளது. எனினும் offshore எனப்படும் கடல் மற்றும் அதை ஒட்டிய நிலப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வேதாந்த குழுமத்தின் ஒரு அங்கம்தான் ஸ்டெர்லைட் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே இதுபோல, விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரி பகுதிகளில் நிலப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தமிழக அரசிற்கு கடந்தாண்டு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி நிராகரிக்கப்பட்டிருந்தது. அதுபோல வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்படும் என்பது உறுதி.