டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழகஅரசின் அரசாணையை உறுதிசெய்து, நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை காரணமாக, அந்த பகுதி மக்கள் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த பகுதி நீர்மட்டமும் மாசமடைந்தது. இதையடுத்து ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார். அப்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.
இதைஎதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகஸ்டு 18 அன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறியது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தல் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக, தமிழகஅரசு சார்பிலும, , மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.