சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தொடரில், அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து, யார் அந்த சார் பேட்ஜ் குத்தியிருந்ததுடன், டங்ஸ்டன் காப்போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசத்தையும்அணிந்து வந்திருந்தனர். இது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததுடன், சமூக வலைதளங்களிலும் பேசும்பொருளாக மாறி உள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவையின் வழக்கமான நிகழ்வுகள் தொடங்கியது. கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களுக்கு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது மகளிர் உரிமை தொகை குறித்து திண்டுக்கல்சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் 5.27 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. 5.27 லட்சம் பேரில் 4 லட்சத்துக்கு அதிகமானோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. திட்ட விதிகளுக்கு யாரும் விடுபடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2.54 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 67 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் திட்டம் தகுதியானவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இதுவரை 1.63 கோடி பேர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம். எ வ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.