ஈரோடு: சிறுமியியிடம் முறைகேடாக கருமுட்டை திருட்டு தொடர்பான முறைகேட்டில், ஈரோடு சுதா கருத்தரிப்பு மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஆனால், சுதா மருத்துவமனைக்கு தமிழ்நாடு முழுவதும் 16 கிளைகள் உள்ள நிலையில், மற்ற 15 கிளைகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், அந்த மருத்துவமனைகளையும் ஆய்வு செய்து மூட உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
டிஜிட்டில் வளர்ச்சி, மக்களிடையே ஆடம்பர மோகம் போன்ற காரணங்களால், முறையற்ற உணவு பழக்கவழக்கம் போன்றவற்றால் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே குழந்தையின்மை போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் வேலைப்பளு, நேரமற்ற நேரங்களில் பணி, முறையான தூக்கமின்மை, பயந்து பயந்து பணியாற்றும் போக்கு போன்ற காரணங்கள் இளைய சமுதாயத்தினர் பயம், பதற்றம், குழப்பம், விரக்தி, கோபம், மனஅழுத்தம், மனச்சோர்வு உள்பட பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டு, தங்களது இல்லற வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். பின்னர், சமுதாயத்தின் முன் தாங்கள் முழுமையானவர்கள் என்பதை நிரூபிக்க, ஐபிஎஃப் எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பு நிலையங்களை நாடுகின்றனர். இதனால், இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே குழந்தைகள் செயற்கை கருத்தரிப்பு மையம் புற்றீசல்போல பரவி வருகின்றன. இதுபோன்ற கருத்தரிப்பு மையங்களில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. ஆனால், அதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.
இதன்பலன், தற்போது 12வயது சிறுமியை மிரட்டி, கருமுட்டைகளை திருடி விற்பனை செய்யும் அளவுக்கு முறைகேடுகள் வளர்ந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு கருமுட்டை விவகாரம் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்துள்ளநிலையில், இதுபோல ஏராளமான கருமுட்டை திருட்டுக்கள் நடைபெற்று வருகிறது என்பதை மறக்க முடியாது. இதற்கு மருத்துவ மாஃபியா கும்பல் துணைபோகின்றன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் சிக்கியுள்ள சுதா கருத்தரிப்பு மையம், மாநிலம் முழுவதும் 16 கிளைகளை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனையில்தான் கருமுட்டை திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சுதா மருத்துவமனை, சட்டத்துக்கு புறம்பாக சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை பெற்றுள்ளது தெரிய வந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சுதா மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட சிறுமியை துன்புறுத்தி கருமுட்டை எடுத்ததாகவும், சிறுமியின் புகாரின்பேரில் அவரது தந்தை தந்தை சையத் அலி, தந்தையின் கள்ளக்காதலி, மற்றும் அவரது தோழியும் மருத்துவமனை புரோக்கருமான மாலதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து 12 வயதாகிய அச்சிறுமிக்கு சட்டத்துக்கு புறம்பாக 20 வயது எனக்கூறி வேறொரு பெயரில் போலி ஆதார் கார்டை உருவாக்கியுள்ளனர்.
இந்த தொழிலுக்கு புரோக்கராக இருந்தவர் மாலதி. இவர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் கருதரிப்பு மருத்துவமனைகளுக்கு அச்சிறுமியை அழைத்துச் சென்று கருமுட்டைகளை எடுத்துள்ளார். இதுவரை அந்த சிறுமியிடம் இருந்து 15 -20 முறை கருமுட்டை எடுக்கப்பட்டு பணத்திற்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு கருமுட்டைக்கும் சுமார் ரூ.20 ஆயிரம் தொகையை மருத்துவமனை அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் புரோக்கர் மாலதிக்கு ரூ.5000 பணம் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த கொடுமையான சம்பவங்களுக்கு பின்புலமாக இதுபோன்ற ஐவிஎஃப் மருத்துவமனைகளே செயல்படு கின்றன.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த மருத்துவமனை நிர்வாகம், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நெருமானது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை, புரசைவாக்கத்தில் பழைய தாஸ் பிரகாஷ் ஹோட்டல் பிரமாண்டமாக சுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை திறக்கப்பட்டது. சுதா கருத்தரிப்பு மையத்தின் 16வது கிளை வேலூரில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
2019ம் ஆண்டு சுதா கருத்தரிப்பு மையத்தின் சென்னை கிளையை அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்தான் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவரான டி.கந்தசாமி, நிர்வாக இயக்குநர் சுதாகர் மற்றும், எஸ்.எஸ்.பிரதீபா உள்பட பிரபலமான சீனியர் ஆடிட்டர் என்.பழனிவேலு, முன்னாள் அதிமுக எம்.பி. பாலகங்கா, மூத்த வழக்குரைஞர் காந்தி, முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அத்துடன் நிகழ்ச்சியில் பேசிய சுதா மருத்துவமனை கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மைய இயக்குநர் தனபாக்கியம், ஈரோடு உள்ளிட்ட எங்கள் மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோதனைக்குழாய் முறையில் பிரசவித்துள்ளோம். 40,000-க்கும் மேற்பட்ட தம்பதிகள் ஐயுஐ முறையில் பயன் பெற்றுள்ளனர் என்றார்.
இவர்களின் பெருமையை கேட்கும்போது, இவர்கள் உண்மையிலேய பாதிக்கப்பட்ட தம்பதிகளிடம் இருந்துதான் கருமுட்டைகளை எடுத்து கருத்தரிக்க செய்கிறார்களா அல்லது, இதுபோன்ற சிறுமிகளை ஏமாற்றி, தொல்லைப்படுத்தி கருமுட்டையை எடுத்து, அதன்மூலம் குழந்தைகளை உருவாக்குகிறார்களா என்பதே கேள்விக்குறியயாக உள்ளது. ஆனால், தற்போது இந்த மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மருத்துவமனையின் 16 கிளைகளிலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருக்றது.
இந்த மருத்துவமனையில், செயற்கை முறையில் குழந்தை பெற்றவர்களில், எத்தனை தம்பதிக்கு உண்மையிலேயே அவர்களின் சொந்த கருமுட்டையில் குழந்தை பிறந்ததா அல்லது இதுபோன்று மற்றவர்களிடம் பெறப்பட்ட கருமுட்டை வாயிலாக குழந்தை பெற்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஒருவேளை டிஎன்ஏ சோதனை செய்துபார்த்தால், சுதா மருத்துவமனையின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரலாம். ஆனால், அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்க எந்தவொரு தம்பதிகளும் முன்வரமாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.
இந்த விவகாரத்தில் தற்போதுதான் தமிழகஅரசு விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனைகள் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், அந்த 4 மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், உள்நோயாளிகளை 15நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனைகள் மீது உடடினயாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இந்த இரு மருத்துவமனைகளும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின்கீழ் இருந்து நீக்கப்படுவதாகவும் கூறியவர், இந்த மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த முறை கேட்டில் ஈடுபட்ட தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள மேலும் 2 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறியவர், ஸ்கேன் மையங்கள் விதிகளை மீறி செயல்பட்டால், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், ஒருவர் ஒருமுறைதான் கருமுட்டை தானம் தர வேண்டும் என்ற விதி மீறப்பட்டு உள்ளதாக தெரிவித்தவர், கருமுட்டை விற்பனை தொடர்பான விசாரணையில், ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமறை கருமுட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கருமுட்டை தானம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விதிமுறைகள் உள்ளன. அதனால், அதை கடைபிடிக்க பல மருத்துவமனை நிர்வாகங்கள் முன்வருவது இல்லை. அதனால்தான், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன.
கருமுட்டை முறைகேடு விவகாரத்தில், சுதா மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்த வேண்டும், இந்த சிறுமியைப்போல என்னும் எத்தனை பேரிடம் கருமுட்டை திருடப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.