கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவோம் என்று முதலவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு கடலின் நடுவே உள்ள பாறைகளில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடல்நடுவே விவேகானந்தர் பாறை அருகே உள்ள மற்றொரு பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
சுவாமி விவேகானந்தர் நினைவிடத்தை பார்வையிட்டு பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தனித்தனியே படகு போக்குவரத்து நடைபெறுகிறது. கடலில் நீர்மட்டம் தாழ்வடைவது போன்ற காரணங்களால் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவிடத்திற்கும் இடையே பாதை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
2025 ஜனவரி 1ம் தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவின் போது இந்த கண்ணாடி பாலத்தை முதலவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் இதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவோம் என்று முதலவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!
மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்!” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.