புதுடெல்லி: கொரோனா தொடர்பாக, பல வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்புவதில் மத்திய அரசு, தேவையற்ற தாமதம் செய்கிறது என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து வந்த பொருட்களை, மாநிலங்களுக்கு விரைந்து அனுப்பிவிட்டோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் தரப்பிலோ, மே 3ம் தேதியன்று மாலைதான், பொருட்களை அனுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஒருவார காலத்திற்கும் மேலான தாமதம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றன மாநிலங்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும், எந்தளவிற்கான மருந்து பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் பொருட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற தகவலே, மாநிலங்களுக்கு தாமதமாய் சென்றடைவதாகவும், அதேசமயம், சொல்லப்பட்ட காலத்திற்குள், அந்த பொருட்கள் வந்தடைவதில்லை என்றும் மாநிலங்கள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், இந்த நடைமுறை எதார்த்தத்திற்கு மாறாக, அனைத்துப் பொருட்களும், உரிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.