நாட்டில், கொரோனா தடுப்பு மருந்திற்கான பற்றாக்குறை பெரியளவில் நிலவும் சூழலில், அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களை, மோடி அரசு கண்டுகொள்வதேயில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில், புனேயிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் போன்ற தனியார் நிறுவனங்கள் மட்டுமே, கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் பெரியளவில் ஈடுபட்டு வருகின்றன. அவை, தேவைப்படும் மருந்தில் 70% அளவிற்கு உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இத்தகைய ஒரு இக்கட்டான சூழலில், அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எதற்காக, இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க வேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சிஆர்ஐ, பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வகம், பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, தமிழ்நாட்டின் எச்எல்எல் பயோடெக், உத்திரப்பிரதேசத்திலுள்ள பாரத் இம்யூனாலஜிகல்ஸ் அன்ட் பயோலாஜிகல்ஸ் கார்பரேஷன் லிட்., மராட்டியத்தின் ஹாப்கின் பயோ-பார்மசூட்டிகல் கார்பரேஷன், தெலுங்கானாவின் ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிட்யூட், தமிழ்நாட்டின் செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து வளாகம் போன்றவை முக்கியமான பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களாகும்.
ஆனால், தற்போதைய இக்கட்டான சூழலில், இவை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, மத்திய மோடி அரசு, அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்பு குறித்து கவலையின்றி, தனியார் நிறுவனங்களின் மீதே, இந்த நேரத்திலும் கவனம் செலுத்தும் உண்மை தற்போது வெளியாகியுள்ளது.