பெங்களூரு: செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்தல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தேர்வெழுதும் ஒவ்வொரு மாணாக்கர் தலையிலும் அட்டைப் பெட்டிகளை மாட்டிய கர்நாடக மாநிலத்தின் தனியார் கல்லூரி ஒன்று தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு மாணாக்கரின் தலையிலும் அட்டைப் பெட்டியை மாட்டி, அதிலே தேவையான இடத்தில் துளையைப் போட்டு தேர்வெழுத வைத்துள்ளனர்.
இதைப் புகைப்படம் எடுத்த ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிட, அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீண்டும் இவ்வாறு நடந்தால் கல்லூரி உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியாக அட்டைப் பெட்டிகளை தலையில் மாட்டுவதால், உடல்நலக் குறைபாடுள்ள மாணாக்கர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும் என்ற புரிதலின்றியும், பத்தாம்பசலித்தனமாகவும் செயல்பட்ட அக்கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.