சென்னை: நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி – 2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.50,900 கோடி பேரிடர் நிதி கோரியும் ரூ.1,151 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டது புயல், பெரு வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறம்படக் கையாண்டது. பேரிடர் நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிதி கோரிய போதிலும் ரூ.1151 கோடி மட்டுமே கொடுத்தது. அதாவதுழ, பேரிடர் நிவாரண நிதியில் சொற்பமான நிதியைத் தான் மத்திய அரசு கொடுத்தது. பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு தமிழகத்தில் ரூ.6,013 கோடி தான் கொடுத்துள்ளது. பேரிடர் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.9,160 கோடி செலவு செய்திருக்கிறது என்றார்.
வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
வரிப் பகிர்வு பங்கை அதிகரிக்க வேண்டும் என மத்தியஅரசிடம் கேட்ட போதும், அதை ஏற்க மறுத்து 41% ஆக தொடரும் என அறிவித்தது. இந்த விஷயத்தில், அரை நூற்றாண்டு காலம் கடந்த பிறகும் கூட நிலை மாறவில்லை. *
தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு 4.07% ஆக குறைக்கப்பட்டதால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 0.44% மிகச்சிறிய அளவிலேயே நிதிப் பகிர்வு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிதி விஷயத்தில், 16-ஆவது நிதிக்குழுவும் தனது கடமையில் இருந்து தவறி இருக்கிறது.
தமிழ்நாட்டில், செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டிய தங்கம் தென்னரசு, மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள் என்றும், ஜி.எஸ்.டி.யால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வரிப் பங்கீடு தமிழகத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடியாக இருக்கிறது என்றவர். ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3112 கோடி நிலுவையில் உள்ளதாகவும், மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி நிலுவைக் கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
2025-26 மத்திய அரசின் பட்ஜெட்டில் வரிப் பங்கு திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளதுஎன்று சுட்டிக்காட்டியவர், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி இழப்பீட்டு நிதி தர நிபந்தனை விதிக்கப்படுகின்றனஎன்றார்.
நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரிவருவாய் ரூ.2.06 லட்சம் கோடி என்றவர் நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
2026-27ல் மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3.93 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

நிதி பகிர்வு குறித்து பேரவையில் விளக்கமாக பேசிய தங்கம் தென்னரசு, ”ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். எனினும், இந்த அரசு எதிர்கொண்டுவரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று.
தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் நிறுத்திவைப்பது, மாநிலங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் வரி விகிதங்களைச் சீரமைப்பது அல்லது நியாயமற்ற நிபந்தனைகளுடன் கூடிய திட்டச் செலவினங்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் ஒவ்வொரு வழியிலும் தமிழ்நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுவருவது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு மாநிலங்களின் ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு கருத்தில் கொள்ளாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைப்பதற்கு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதனால், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை முடிவடைந்ததால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், இந்த வரி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடப்பு ஆண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் சாசனம் பிரிவு 293(3)-ன் படி மாநில அரசுகள் தங்களுக்குரிய கடனைத் திரட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசானது, நிலுவையிலுள்ள உத்திரவாதங்களில் 5 சதவீதத்தை உத்திரவாத மீட்பு நிதியத்திற்கு மாற்றவேண்டும் என முன்னறிவிப்பின்றி விதித்துள்ள நிபந்தனையால், அரசிற்கு 3,087 கோடி ரூபாய் எதிர்பாராத மற்றும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கான சுமார் 9,500 கோடி ரூபாய், மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 9,29,959 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன், 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 9,52,374 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, மத்தியஅரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் கணக்குகளில் இடம்பெற வேண்டிய 9,522.65 கோடி ரூபாயும் இதில் உள்ளடங்கும். மாநில அரசின் கடன் செயற்கையாக அதிகரித்துக் காணப்படுகிறது. இத்தொகை நீங்கலாக, திருத்த மதிப்பீடுகளில் உள்ள கடன் 9,42,851 கோடி ரூபாயாகவும், நிலுவையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10,62,248 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் உரையை வாசித்து முடித்தா் அமைச்சர் தங்கம் தென்னரசு. அமைச்சர் தங்கம் தென்னரசு 2:22 மணி நேரம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை வாசித்துள்ளார்.