கர்நாடக மாநிலத்திற்கு நாளொன்றுக்கு 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், மத்திய அரசு அம்மாநிலத்திற்கு 1015 மெட்ரிக் டன் ஒதுக்கியிருக்கிறது, இதில் 250 டன் ஆக்சிஜனை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

மீதமுள்ள 765 டன் ஆக்சிஜனை மாநிலத்தில் உள்ள எட்டு உற்பத்தி நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள அறிவுத்தியுள்ளது.

போக்குவரத்து மற்றும் கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு இரும்பாலையில் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜனை உரிய நேரத்தில் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், கர்நாடகாவில் உள்ள இரும்பாலைகள் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி ஆகும் 283 டன் ஆக்சிஜனை பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அனுப்பி வருகிறது.

இதில், பெல்லாரியில் உள்ள லிண்டே நிறுவனத்தில் இருந்து 43 மெட்ரிக் டன்னும் ஜெ.எஸ்.டபுள்யு. நிறுவனத்தில் இருந்து 20 டன் என மொத்தம் 63 டன் ஆக்சிஜன் ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று ஒரே நாளில் மட்டும் ஆந்திரா இவ்விரு ஆலைகளில் இருந்தும் மொத்தம் 93 டன் ஆக்சிஜன் கொண்டு சென்றிருக்கிறது, இது அதற்கு ஒதுக்கப்பட்ட அளவை விட 30 டன் அதிகமாகும்.

மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் அளவுகளை குறைத்து தனது மாநிலத்தில் உள்ள உற்பத்தி மையங்களிலேயே ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்து தருமாறு கர்நாடக அரசு கோரிக்கை வைத்துள்ளது, இருந்தபோதும் இதற்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

ஆந்திராவில் இருந்து 250 டன் கர்நாடகாவிற்கும், கர்நாடகாவில் இருந்து 63 டன் ஆக்சிஜன் ஆந்திராவுக்கும் என்று ஒதுக்கீடு செய்வதால், இரு மாநில அரசுகளுக்கும் விமானம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து மற்றும் கொள்கலன் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதற்கு பதில் குறைந்தபட்சம், ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட 63 டன்னை விசாகப்பட்டினத்தில் இருந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினால் கூட அந்த 63 டன்னை கர்நாடகாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பல்வேறு நிர்வாக சிக்கல்களால் கொரோனா பெருந்தொற்று நாட்டை புரட்டி போட்டுக்கொண்டிருக்க, மத்திய அரசின் இந்த தலையை சுற்றி மூக்கை தொடும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டால் மாநிலங்களின் உயிர்வளி (உயிர் வாழ தேவையான காற்று) விநியோகத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.