டில்லி:

போக்குவரத்து அபராதத் தொகை விவகாரத்தில், நிதின்கட்கரிக்கு எதிராக குஜராத் பாஜக மாநிலஅரசு போர்க்கொடி தூக்கியதோடு மட்டுமல்லாமல், விதிமீறல் அபராதத் தொகையையும் அதிரடியாக குறைத்து அறிவித்த நிலையில்,   போக்குவரத்து அபராதத் தொகையை மாநில அரசுகள்  குறைத்துக்கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்து உள்ளார்.

கடுமையாக உயர்த்தப்பட்ட போக்குவரத்து அபராத கட்டணம் மக்களிடையே பெரும் அதிருப் தியை ஏற்படுத்தி வந்த நிலையில், குஜராத் மாநில பாஜக அரசு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக வாகன விதிமீறல் தொடர்பான அபராத கட்டணங்களை பாதியை குறைத்து அறிவித்தது.

இது பாஜகவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக, மாநில பாஜக அரசு போர்க்கொடி தூக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில், கேரளா போன்ற மாநிலங்கள், மத்திய அரசின் புதிய போக்குவரத்து அபராதம் குறித்த அறிவிப்பை நிறுத்தி வைத்தன.

இந்த நிலையில்,  மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சசர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார்.

குஜராத் மாநில பாஜக அரசின் எதிர்ப்பு மற்றும் அபராதத் தொகை குறைத்து அறிவிப்பு வெளி யிட்டதன் காரணமாக,  நிதின் கட்கரியால் அந்த மாநில அரசு மீது, ஏதும் செய்ய முடியாத நிலையில், மற்ற மாநிலங்களும் விரும்பினால் அபராதத் தொகையை குறைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து விட்டார்.