ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆதீனம், மதுரை ஆதீனம். இந்த ஆதீன மடத்தில் 292 வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்
அருணகிரிநாதர். அதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இதையடுத்து `நித்தியானந்தா இளைய ஆதீனம் என்று தான் அறிவித்ததை ரத்து செய்தார். இதை எதிர்த்து நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியான தான், ஆதீன மடத்துக்குள் சென்று பூஜை செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில் நித்தியானந்தா தன்னை ஆதீனமாக அறிவித்துக்கொள்ளக் கூடாது. ஆதீன மடத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று ஜெகதலபிரதாபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,, ‘ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து இன்று உத்தரவிட்டது. மேலும், மடங்களில் வாரிசு நியமிப்பது பற்றி, வழிகாட்டுதல் என்னவென்பது பற்றி அறநிலையத்துறை பதில் அளிக்கக்கோரி விசாரணையை ஒத்திவைத்தது. அதோடு, எந்த ஆதீனத்தில் தவறு நடந்தாலும் மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.