ஆரம்ப காலத்தில் மத்திய, மாநில அரசுகள் 50:50 என்ற அளவில் காப்பீடுக்கான இழப்பீடு வழங்கிய நிலையில், தற்போது மாநில அரசு 75 சதவிகிதமும், மத்தியஅரசு 25 சதவிகிதம் என்ற அளவில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாதிரியான விவசாய பயிர்க் காப்பிடு திட்டத்தில்.. மாநில அரசு கொடுக்கும் பங்கில் பாதி அளவு கூட பணத்தை போடாத ஒன்றிய அரசு அதன் திட்டத்திற்கு மட்டும் “பிரதமர்” பயிர் காப்பீட்டுத் திட்டம் என தங்கள் பெயரை போட்டுக் கொள்வது நியாயமாக என கேள்வி எழுப்பபடுகிறது.
இதுபோல மத்தியஅரசின் ‘ஆவாஸ் யோஜனா’ என்ற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மாநில அரசுகளின் பங்குதான் மிக அதிகம். ஆனால் அதிலும் “பிரதமர்” என ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இதனால், மத்தியஅரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்கள் அனைத்தும் போர்குரல் எழுப்ப வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் அமலாக்கம், 6 ஆண்டுகளை நிறைவு செய்து, வரும் காரீப் 2022 பருவத்துடன் 7ம் ஆண்டில் நுழைகிறது.
மத்திய அரசின் முன்னணி திட்டமான பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் பாதிப்பால் சிரமப்படும் விவசாயிகளுக்கு நிதி ஆதரவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. 36 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2022 பிப்ரவரி 4ம் தேதிவரை, இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு ரூ.1,07,059 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, இத் திட்டம், விவசாயிகள் தாங்களாக முன்வந்து பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி,
அரசாங்கம் சமீபத்தில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவை (PMFBY) காரீஃப் 2020 முதல் புதுப்பித்துள்ளது மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரீமியம் மானியப் பகிர்வு முறையை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 இலிருந்து 90: 10 ஆக மாற்றியுள்ளது. மீதமுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பிரீமியம் பகிர்வு முறை திட்டத்தின் பிற விதிகளுக்கு உட்பட்டு 50:50 ஆகும்.
மேலும், மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்கள் சொந்த பட்ஜெட்டில் இருந்து திட்டத்தை சிறப்பாக வழங்குவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதற்காக மொத்த பட்ஜெட்டில் 3% ஒதுக்கப்பட்ட நிர்வாகச் செலவுகளுக்கான திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கடந்த ஆண்டு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் பயிர் காப்பீடு (PMFBY) திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மத்திய அரசு தனது பங்கைக் குறைத்துவிட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாலும், இவ்வாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனினும் தமிழக அரசு எடுத்த பெரும் முயற்சியினால் 5 காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்த நிலையில் காப்பீட்டு கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருந்த காரணத்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் அதிக காப்பீட்டு கட்டண விகிதம் நிர்ணயம் செய்திருந்ததாலும் இரு முறை ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டு மூன்றாவது ஒப்பந்தப் புள்ளியில் இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் (பொது காப்பீட்டு நிறுவனம்) மற்றும் இப்கோ-டோக்கியோ ஆகிய இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரை, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை காரீப், 2020 பருவத்திற்கு ரூ.107.54 கோடியை சுமார் 1,64,173 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-2021ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் நிவர் புயல், புரவி புயல் மற்றும் வடகிழக்குப் பருவ மழையினால் பெரும் சேதமடைந்து அதற்கான இழப்பீட்டுத் தொகை மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு தமிழக அரசு “காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1248.92 கோடி விடுவித்துள்ளது. இத்தொகை, திட்டம் தொடங்கப்பட்ட 2016-2017 வருடம் முதல் 2020-2021 வரை வழங்கப்பட்ட மானியத்தை விட அதிகமான தொகையாகும்.
தற்போது தமிழக அரசு பெரும் நிதிச்சுமையில் இருந்தாலும் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை பெற இப்பெரும் தொகையை இவ்வரசு விடுவித்துள்ளது. பயிர் பாதுகாப்பீடு திட்டத்தில் இணைந்த 85 சதவீதம் விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். பயிர் காப்பீடு திட்டத்தில், டிரோன்களை பயன்படுத்துவதற்கான அறிவிப்பை, 2022-23ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது இத்திட்டத்தை எளிதாக அமல்படுத்தவும், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் உதவும் என்றும், விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று பயிர் காப்பீடு பாலிசிகளை வழங்கும் ‘எனது பாலிசி என் கையில்’ என்ற திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நடைமுறையில் சுமார் 75 சதவிகிதம் மாநில அரசும், 25 சதவிகிதம் அளவிலேயே மத்தியஅரசும் பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு மானியம் வழங்கி வருகிறது.