சென்னை: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நடுநிலையோடு செயல்படுங்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலுக்காக இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி  உள்ள நிலையில்,  தேவையான பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களோடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை நடத்திய நிலையில்,  தேர்தல் நடைபெறும் இடங்களில்  அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வேட்புமனு பரிசீலனையில் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு தேர்தல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும்,  தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, பணப்பட்டுவாடாவை தடுப்பது, பறக்கும் படை சோதனைகளை முறையாக கண்காணித்தல் போன்றவற்றில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறியதுடன்,  அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.