சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிக்க மாநில தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கட்சியினர் மற்றும் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில், இந்தநடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ந்தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள்.. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் மிகப் பெரியவை. இதில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும் மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 வார்டுகளும் இருக்கின்றன. இந்தத் தேர்தலுக்கென மொத்தமாக 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. மொத்தமாக 2,79,56,754 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதம் மொத்தமாக 1.33 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவார்கள். இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இதற்காக 55,337 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறுவனத்தால் சுமார் 55,337 கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்), 1,06,121 வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால், வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் 15 மண்டலங்களுக்கு தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மையமும், ஓரிரு பெரிய மண்டலங்களுக்கு மட்டும் 2 வாக்கு எண்ணிக்கை மையங்கள் என மேலும் 15 முதல் 20 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோல மற்ற மாநகராட்சிகளிலும் தேவைக்கேற்க வாக்கு எண்ணிக்கை மையங்கள் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாகவே கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.