சென்னை:  விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என எழுத்துப்பூர்வமாக மத்தியஅரசுக்கு தெரிவித்து விட்டதாகவும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடை முறைப்படுத்தப்படும்  என்றும் கூறினார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,   “நான் கூட பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை.  இன்று தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். பெண்கள் படிக்க இயலாத காலம் இன்று மாறியிருக்கிறது. காலத்துக்கேற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். எந்தத் துறை மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் Inter Disciplinary படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம் என்றவர், மதம், மொழி, இனத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்தவ மிஷனரிகள்தான் பலரையும் படிக்க வைத்து வருகின்றனர். சிறுபான்மை சமுதாயமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதே திராவிட மாடல் ஆட்சி என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,  மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன்,  புதுமைப் பெண் திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், “தாய்மொழி தமிழும், சர்வதேச மொழியான ஆங்கிலமும் இருக்கும்போது பிற மொழிகள் எதற்கு? மூன்றாவதாக இன்னொரு மொழியை படிக்க வேண்டுமென்றால் தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும். என்றவர்,

பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அப்படி பொதுத்தேர்வு கொண்டு வந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10, 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். மத்திய கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஷ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தவர்,  விரைவில் தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்றார்.