புதுடெல்லி: மாநில மின்சார விநியோக நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்தில் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதால், ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தனியார் மற்றும் பொதுத்துறை மின்சார உற்பத்தி மையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
இதுகுறித்து கூறப்படுவதாவது; மின்சாரம் உற்பத்தி செய்து மாநிலங்களுக்கு வழங்கும் ஜி.எம்.ஆர். மற்றும் அதானி குழுமம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, கடந்த 2018 டிசம்பர் மாதம் வரையான காலத்தின்படி, ரூ.41,730 கோடி நிலுவைத் தொகை வந்துசேர வேண்டியுள்ளது. இத்தொகையை மாநில விநியோக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
ஆனால், அவற்றிடமிருந்து முறையாக கட்டணங்கள் வந்து சேர்வதில்லை. இன்றைய தேதி வரை, அந்தத் தொகை ரூ.60,000 கோடி என்ற அளவில் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலுவைத் தொகையிலேயே அதிகளவு பாக்கி வைத்திருப்பது பாரதீய ஜனதா ஆளும் உத்திரப்பிரதேசம்தான். இரண்டாவது இடத்தில் அதே கட்சி ஆளும் மராட்டியம் வருகிறது.
மற்றபடி, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையான காலத்தில் கட்டணத் தொகையை செலுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி