ஆரம்பமானது அரசியல் கொலை..  என்னவாகும் மே.வங்காளம்?

ஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்?

ற்ற மாநிலங்களை விட –மே.வங்காளத்தின் மீது தான் பா.ஜ.க.தனது முழு கவனத்தையும் திருப்பி விட்டு உள்ளது.தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில்,பா.ஜ.க.வின் அனைத்து படைப்பிரிவுகளும் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களாக அந்த   மாநிலத்தின் ஏதாவது ஒரு மூலையில் மத்திய அமைச்சர் அல்லது வெளிமாநில பா.ஜ.க.அமைச்சர் பங்கேற்கும் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

என்ன காரணம்?

தென் மாநிலங்கள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க. அறவே இழந்துவிட்டது.கூட்டணி வைத்தாலும்,வைக்கா விட்டாலும் –கர்நாடகம் தவிர வேறு எந்த மாநிலமும் கை கொடுக்கும் என்று தோன்றவில்லை.

உ.பி.உள்ளிட்ட  இந்தி ‘பெல்ட்’களில் கடந்த முறை பெற்ற வெற்றியை இந்த முறை ருசிக்கும் சாத்தியங்கள் இல்லை.இங்கே ஏற்படும் இழப்பை வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மே.வங்க மாநிலத்தில் இருந்து ஈடுகட்ட முடியும் என்று கணித்துள்ளது பா.ஜ.க. மேலிடம்.

வட கிழக்கு மாநிலங்களில் பலமான கூட்டணி இருப்பதால்-அங்கு தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டத்தேவை இல்லை என்று கருதும் பா.ஜ.க. தலைமை –மே.வங்கத்தில் முழுமூச்சாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அந்த மாநிலத்திம் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன.கடந்த முறை 2 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க.ஜெயித்திருந்தது.மம்தா கட்சிக்கு 32 எம்.பி.க்கள்.

அங்கு 25  ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- கடந்த 5 ஆண்டுகளில் தனது தளத்தை இழந்து விட்டது.பெரும்பாலான சிவப்பு சட்டை காரர்கள்,மம்தா அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் –காவிச்சட்டை அணிந்து விட்டனர்.காங்கிரசுக்கும் அங்கு பலமில்லை.

பிரதான போட்டி மம்தாவின் திரினாமூல் காங்கிரசுக்கும் ,பா.ஜ.க.வுக்கும் தான்.வரும் தேர்தலில் 22 தொகுதிகளை இந்த மாநிலத்தில் இருந்து பெற வேண்டும் என்பது –பா.ஜ.க,வின் இலக்கு.இந்த வெற்றியை பெறுவதற்கு எதையும் செய்ய  தயாராகி விட்டது.

மே.வங்க தேர்தல் களத்தில் அரசியல் கொலைகளுக்கு பஞ்சம் இருக்காது.

அதனை நேற்று நடந்த கொலை உறுதிப்படுத்தியுள்ளது.

அங்குள்ள கிருஷ்ணகஞ்ச் தனி தொகுதி எம்.எல்.ஏ.சத்யஜித் பிஸ்வாஸ்.திரினாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

புல்பாரி என்ற இடத்தில் நேற்று நடந்த சரஸ்வதி பூஜை யில்  மாநில அமைச்சர் ரத்னகோஷ் என்பவருடன் பிஸ்வாசும் பங்கேற்றார். அங்கு வந்த மர்ம நபர்கள் பிஸ்வாசை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இவர் புது மாப்பிள்ளையும் கூட. தனது ஏரியாவில் சக்தி மிக்க பட்டியலின தலைவராக இருந்தவர்.

இவரது கொலையால் மாநிலம் பதற்றத்தில் இருக்க –

இந்த கொலைக்கு காரணம் பா.ஜ.க.என குற்றம் சாட்டியுள்ளது –திரினாமூல் காங்கிரஸ்.

தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்கப்போகிறதோ? என பீதியில்  ஆழ்ந்துள்ளனர் அந்த  மாநில மக்கள்.

Tags: Chief Minister Mamtha Banerji, mamtha banerji, political murder, west bengal, அரசியல் கொலை, சத்யஜித் பிஸ்வாஸ், மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலம்