கொல்கத்தா:

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் சமநிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது 114 இடங்களில் பாரதியஜனதா முன்னிலை வகித்து வருகிறது.

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னோடியாக கர்நாடக சட்டமன்ற தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் உற்றுநோக்கிய நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி மஜத-வுடன் கூட்டணி வைத்திருந்தால் கர்நாடக தேர்தல் முடிவுகளே வேறுமாதிரி அமைந்திருக்கும் என்று கூறி உள்ளார்.

இருந்தாலும்,  கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறிய மம்தா, தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள் என்று காங்கிரசுக்கு ஆலோசனை சொல்லி உள்ளார்.