டெல்லி:பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைதொடர்பு ஊழியர்களுக்கான விஆர்எஸ் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களின் நிதித்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் நோக்கம், 50 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையோருக்கு விஆர்எஸ்(விருப்ப ஓய்வூதியம்) வழங்குவது என்பதாகும்.
இந்த திட்டத்தில் சேர விரும்பும் ஊழியர்கள், 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கடைசி தேதியாகும். அவர்களுக்கு வழங்குவதற்கு, ரூ.17,160 கோடியும், ஓய்வுக் கால சலுகைகளுக்கென ரூ.12,768 கோடியும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மொத்தமுள்ள 1.76 லட்சம் ஊழியர்களில், 50 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 1.06 லட்சமாகும். எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 பேர் உள்ளனர்.
மொத்த வருவாயில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்காக 75 சதவீதம் ஊதியமும், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு 87 சதவீதமும் செலவாகிறது. இந்த செலவை கணக்கிட்டே விருப்ப ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது: பிஎஸ்என்எஸ், எம்டிஎன்எல் அதிகாரிகளை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்துள்ளார். அவர்களிடம் விஆர்எஸ் திட்டம் பற்றி ஊழியர்களிடம் பேசி, அந்த திட்டத்தை செயல்படுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
ஒருவேளை, 50 முதல் 53.5 வயதுள்ள ஊழியர்கள் விஆர்எஸ் தந்தால், 80 முதல் 100 சதவீதம் பணப்பலன்கள் பெறுவர். 55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்கள் விஆர்எஸ் தந்தால், ஓய்வூதியம் 60 வயது அடைந்த பின்னரே தொடங்கும். 55 அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்களுக்கு 2024-25-ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் ஆரம்பமாகும்.