சென்னை:

மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கமல்ஹாசன் இன்று அழைப்புவிடுத்த நிலையில், மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பதிலடியாக பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவக்கிய நடிகர் கமல்ஹாசன், பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது மதுவின் ஆதிக்கம், கல்வி தனியார் மயம், இலவசங்கள் குறித்தெல்லாம் பேசிய அவர், “இதையெல்லாம் சுத்தம்செய்ய இதுவே சரியான நேரம் என்பதால், மாணவர்கள் என்னுடன் கரம் கோக்க வேண்டும். உங்களைப் போலவே உங்கள் அடுத்த தலைமுறைகளும் இந்த அவலத்தில் வாழக்கூடாது. என்னைப் போன்று மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்.” என்று பேசினார்.

இந்த நிலையில் இன்று இரவு நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில், “மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது” என ரஜினிகாந்த் வலியுறுத்தி பேசினார்.

சென்னை பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.ஜி.ஆர் சிலையை திறந்துவைத்து அவர் பேசியபோது, எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான நெருக்கம் குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒருவரது வாழ்க்கையில் மாணவப்பருவம்தான் மிக மிக்கியமானது. நான்கு வருட படிப்பு காலம்தான் அவரவர் நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கும். படிப்பு என்பது அந்த மாணவனுடையது மட்டுமல்ல… அவனது பெற்றோரின் கனவு, உழைப்பு, லட்சியம்.

ஆகவே படிக்கும் காலத்தில் அரசியலில் ஈடுபடவே கூடாது. அரசியலை தெரிந்துகொள்ளலாம். ஓட்டுப்போடலாம். ஆனால் அரசியலில் ஈடுபடக்கூடாது” என்று ரஜினி பேசினார்.

இன்று மதியம், “மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” என்று கமல் கூற, “வரவே கூடாது” என்று ரஜினி பதிலடியாக பேசியிருப்பது  இருலவருக்குமிடையில் அரசியல் போட்டி துவங்கிவிட்டதை உணர்த்துகிறது.