பாட்னா:

நாடு முழுவதும் இன்று கார்த்திகை பவுர்ணமி சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் நீராட சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வடமாநில மக்களால் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா (பவுர்ணமி) விழா ஜெயின் மற்றும் சீக்கிய மதத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாரியா என்னும் புனித தளத்தில் ஓடும்  கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று கூடினர்.

அவர்கள் ஒரே நேரத்தில் நீராட கங்கை நதியில் இறங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வதந்தி காரணமாகவே நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவியை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.