உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இருந்தபோதும், அதிகாலை முதல் இதுவரை 4 முறை உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ள பிரதமர் மோடி மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவருடன் தொடர்ந்து பேசிவருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

இந்த சம்பவத்தில் 15 முதல் 30 பேர் வரை பலியாகி இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், நிலைமையின் தீவிரத்தை கொண்டு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ப்ரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கும்பமேளா நிகழ்வில் மொத்தம் 45 கோடி மக்கள் கலந்து கொள்வார்கள் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரசு நிர்வாகம் தொடர்ந்து கூறி வந்தது.

இந்த நிலையில் மௌனி அமாவாசை தினமான இன்று ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சுமார் 10 கோடி மக்கள் நாடு முழுவதும் இருந்து அங்கு திரண்டனர்.

இதனை சற்றும் எதிர்பாராத ப்ரயாக்ராஜ் நகர நிர்வாகம் நேற்றிரவு முதல் மக்கள் கூட்டம் திடீரென அதிகரித்ததாலேயே இந்த நெரிசல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது.

இதையடுத்து ப்ரயாக்ராஜ் நகருக்கு வரும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் பல ரயில்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த மகாகும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு கங்கையில் புனித நீராடச் சென்ற தங்கள் உறவினர்கள் நிலை குறித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.