உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மௌனி அமாவாசைக்கு முந்தைய நாளான செவ்வாய்கிழமை இரவு 8 மணி வரை 4.83 கோடி பேரும், மகர சங்கராந்தி அன்று 3.5 கோடி பேரும், பவுஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பேரும் நீராடியுள்ளனர்.
இன்று தை அமாவாசையை (மௌனி அமாவாசை) முன்னிட்டு 10 கோடி பேர் வருகை தரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனையொட்டி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இரவு 10 மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக சங்கமத்தை அடைய ஆரம்பித்தது.
மௌனி அமாவாசை நாளில் திரிவேணி சங்கமத்தின் மூக்கு பகுதியில் புனித நீராட அனைவரும் விரும்பினர் இதனால் அங்கு கூட்டம் அதிகரிக்க துவங்கியது.
இதனையடுத்து நீராடிவிட்டு வெளியேறும்படி பக்தர்களை நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்திவந்தது. ஆனால் புனித நீராட மக்கள் கூடிக்கொண்டே இருந்தனர்.
அதேவேளையில், காலை 5 மணிக்கு தொடங்கும் அகாராக்களின் புனித நீராடல் நிகழ்வுக்கு நிர்வாகம் வழி ஒதுக்கி ஏற்பாடு செய்து வந்தது.
இரவு 1 மணி முதல், மக்கள் குளிக்க செல்ல வேண்டிய பாதையில் மக்கள் கூட்டம் அதன் கொள்ளளவுக்கு அதிகமாகத் தொடங்கியது.
அதேநேரத்தில், மௌனி அமாவாசை அன்று நீராட வந்தவர்களில் பலர் பேரிகார்டின் ஓரத்தில் விரிக்கப்பட்ட தார்பாயின் மீது படுத்திருந்தனர்.
குளிப்பதற்காக படித்துறை வரை செல்ல பாரிகார்டுகளுடன் மக்களுக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், கூட்டம் அதிகமாகி 1.45 மணி முதல் 2 மணி வரை மக்கள் கட்டுப்பாட்டை மீறி தடுப்புகளை தாண்டி குதித்து சங்கம் செல்ல ஆரம்பித்தனர்.
தடுப்புக் கட்டையைத் தாண்டி குதித்தபோது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மக்கள் விழுந்தனர், இதைத் தொடர்ந்து மரக்கட்டைகள் உடைந்து, கூட்டம் திடீரென நகர்ந்து அங்கு படுத்திருந்த மக்களை மிதித்தது.
இந்த நெரிசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தவிர குளிக்கச் சென்றவர்களும் கீழே விழுந்து உடல் நசுங்கி காயம் அடைந்தனர்.
கூட்டம் கூட்டமாக மக்களை மிதித்ததோடு மக்கள் பீதியில் ஓடத் துவங்கியதால் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்கள் எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மரண ஓலம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. பக்தர்கள் உதவியுடன் அவர்களை ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் சென்ற காவல்துறையினர் பலரது உடலை போர்வையால் மூடிச் சென்றனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 1 கிமீ தொலைவில், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை கூடாரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பலரின் நிலை குறித்து தெரிந்துகொள்ள அவர்களது உறவினர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நெரிசல் காரணமாக திரிவேணி சங்கமத்தில் இறங்காமலேயே பக்தர்கள் பலர் வெளியேறினர்.
தவிர, சங்கமத்தின் மூக்கு பகுதியில் மக்கள் கூட்டம் குவிவதை தவிர்க்குமாறும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் புனித நீராடவும் பக்தர்களை நகர நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நெரிசலை அடுத்து மௌனி அமாவாசை தினத்தில் காலை 5 மணிக்கு முதலில் நீராட இருந்த அகாராக்கள் தங்கள் புனித நீராடலை ஒத்திவைத்திருப்பதாகவும் அவர்கள் பின்னர் குளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.