சென்னை: சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பின் மூலம் சட்டப்பேரவையின் விதிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2017ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது. இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து உரிமை மீறல் குழு, திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. பின்னர் இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்குகளில் ஜூலை 31 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு