சென்னை:

ட்டைப் பானையில் சமையல் செய்ய நினைக்கிறது அதிமுக அரசு என தமிழக அரசு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான  மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று காலை 10.30 மணி அளவில் தமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது கூச்சலிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், இன்றைய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஓட்டைப் பானையில் சமையல் செய்ய நினைக்கிறது அதிமுக அரசு என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ஜிஎஸ்டி வரிக்கு ஜெயலலிதா அம்மையார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  ஜிஎஸ்டி வரியால் பலன் அடைந்திருப்பதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக மத்திய பாஜக ஆட்சிக்கு ஜால்ரா போடக்கூடிய ஆட்சியாக இது உள்ளது என்பதை தெளிவாகிறது என்றும் கூறினார்.

மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் நிதி மேலாண்மை மோசமான நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய பட்ஜெட் குறித்து ஒரே வரியில் கருத்து தெரிவிக்க வேண்டுமானால், ஓட்டைப் பானையில் சமையல் செய்ய நினைக்கிறது தமிழக அரசு என்று கூறி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து,  திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.