ராமநாதபுரம்:

திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு ஸ்டாலின் முதல்வராக நினைக்கிறார்  என்று ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்க செய்தவர் பிரதமர் மோடி என்று கூறியவர், மத்தியில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நாடு நலம் பெறவும், வளம் பெறவும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்த பேசியவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க கடந்த 2 ஆண்டுகளில்  35 ஆயிரம் போராட்டங்களை ஸ்டாலின் நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டியவர்,  அரசின்  நலத்திட்டங்கள் மக்களை சென்றடையாமல் தடுத்து வருகிறார் என்று குறை கூறினார். ஸ்டாலின் இன்னும் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அனைத்தையும் முறியடிக்க கூடிய சக்தி எங்களுக்கு உண்டு என்று பேசியவர்,  நான் முதல்வரானதில் இருந்து என்னை பதவி விலகச் சொல்வதிலேயே ஸ்டாலின் குறியாக இருப்பதாகவும், அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என அவர் கனவு கண்டு வருகிறார்… அ.தி. மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் வரை அவர் முதல்வராக முடியாது.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.