சென்னை: ஏழை மக்களுக்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளதானது, கருணையில்லாத ஆட்சி நடப்பதையேக் காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொது மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டுமே தவிர, தாமாக உதவி செய்யக்கூடாது. உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தானும் செய்ய மாட்டேன்; மற்றவர்களும் செய்யக் கூடாது என்பது இந்த ஆட்சியின் வஞ்சகம். கூட்டம் சேர்வதை ஒழுங்குபடுத்துவதை விடுத்து, உதவியே செய்யக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்?
மக்களின் கண்ணீர் துடைக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் முடியாது மற்றும் தடுக்க நினைப்பதும் சர்வாதிகாரத்தனம். ‘கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’ என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன்” என்றுள்ளார் அவர்.