சென்னை: தமிழக முதலமைச்சருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, அவரது தாயார் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தவர், எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் வயது முதிர்வு காரணமாக மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதி சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. முதல்வரின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பினார். அதையடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோர் சென்றனர். அங்கு முதல்வரை சந்தித்து, இரங்கல் தெரிவித்ததுடன் முதலமைச்சரின் தாயார் தவுசியம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.