சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, நோய்த்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகள் குறித்தும், ஆசிரியர்கள் மீதான பல்வேறு போராட்ட வழக்குகள் வாபஸ் மற்றும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும்,தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த முதல்வர் வழங்கிய ஆலோசனைகள் வழங்கியதாகவும், அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.