சென்னை: 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது  திமுக ஆட்சி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும்,  மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும். திமுக அரசு, கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றும்  புகழாரம் சூட்டி உள்ளார்.

J

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் மாநகரம் செம்பாக்கம் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ” ஏழை – எளிய – தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்கையை உயர்த்துவதற்காக 70க்கும் மேற்பட்ட வாரியங்களையும், துறைகளையும் உருவாக்கி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரை போலவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொண்டுவந்து தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 16 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி அவர்களது வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் விடியல் பயண திட்டம், புதுமைப் பெண் திட்டம் என பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான திட்டங்களை கொண்டு நாடு பாராட்டும் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக 1500க்கும் மேற்பட்ட முதல்வர் மருந்தகங்களை இந்த அரசு திறந்துவைத்துள்ளது. இதில் குறைந்த விலைக்கு மருந்துகள் விற்கப்பட்டு வருகிறது.

கல்விக்கும் மருத்துவத்திற்கும் திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை நான்கே ஆண்டில் செய்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி. இந்தியாவிலேயே மக்களுக்காக செயல்படுகிற முதல்வராக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்” என  கூறினார்.