சென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 2-ம் கட்ட சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாளை மறுநாள் முதல் 5 நாட்களுக்கு தனது 2-ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்” என்ற பெயரில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த 29-ந்தேதி (டிசம்பர்) முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
நாளை மறுநாள் (4-ந்தேதி) 2-ம் கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். ராமநாதபுரம் மாவட்டம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் மதியம் 1 மணிக்கு பேசுகிறார்.
மறுநாள் 5-ந்தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி கலைஞர் திடலில் பேசுகிறார். மதியம் 1 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் நட்டாச்சி ஊராட்சி பட்டாண்டிவிளை கிராமத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
வருகிற 6-ந்தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெறும் கூட்டத்திலும், மதியம் 1 மணிக்கு அம்பை அருகே உள்ள வீரவநல்லூர் பேரூராட்சி பகுதியிலும் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
7-ந்தேதி காலை 8 மணிக்கு சங்கரன்கோவில் அண்ணா திடலிலும், மதியம் 1 மணிக்கு விருதுநகர் பட்டம்புதுநகர் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
8-ந்தேதி அன்று சிவகங்கை மாவட்டம் கே.வைரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மதியம் 1 மணியளவில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு தனது 2-ம் கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.