சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு விருதுகளை வழங்கிறார்.

76-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ காவல்துறையினர் அழைத்து வருவர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதலமைச்சர், பின்னர் தேசியக் கொடியை ஏற்றுவார்.

அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்துவார்.
அதன் தொடர்ச்சியாக தகைசால் தமிழர் விருது , ஏ. பி.ஜே. அப்துல் கலாம் விருது , கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் வழங்கிறார்.