சென்னை: தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக, டெல்லி ஜேஎன்யூ பல்கலையின் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகப் பல்கலைகளின் வேந்தராக உள்ள தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த நியமனத்தை செய்துள்ளார்.
இதுகுறித்து கண்டித்துள்ள திமுக தலைவர், “ஜேஎன்யூ பல்கலையில் மாணாக்கர்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களை வேடிக்கைப் பார்த்த துணைவேந்தருக்கு, பரிசு வழங்குவதைப்போல் இந்த நியமனம் அமைந்துள்ளது.
இது மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணம். வெளிப்படைத்தன்மை என்ற பெயரில், கல்வியில் முன்னேறிய தமிழகத்தின் உயர்கல்வி கட்டமைப்பில், காவிமயத்தைப் புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு மாநில ஆளுநரே, அரசியல் சட்ட நெறிகளுக்கு புறம்பாக செயல்படுவது மிகுந்த வருத்தத்திற்குரியது.
எனவே, இப்பதவிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கல்வியாளருக்கு இப்பதவியை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார்.