கோயம்புத்தூர்: தன் மாநிலத்தை பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு பிரதேசமாக வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வந்து, பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எந்தவித அறம் சார்ந்த உரிமையும் இல்லை என்றுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சமீபத்தில், கோவைக்கு பிரச்சாரம் செய்ய வந்தார் யோகி. அப்போது, பாஜக மற்றும் சங்பரிவாரத்தினர் மோசமான வன்முறையில் ஈடுபட்டனர். பிரச்சார மேடையில் பேசிய யோகி, “தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை” என்று பேசிவிட்டு சென்றார்.
அதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், “மத்திய அரசின் புள்ளிவிபரப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிலைமை அப்படியிருக்கையில், தமிழ்நாட்டில் வந்து திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு யோகிக்கு என்னவிதமான அறம் சார்ந்த உரிமை உள்ளது.
இவர்கள், ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மம் குறித்து பேசுவார்களா? மதுரையில் கட்டுவதாக சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பதிலளிப்பார்களா?” என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் ஸ்டாலின்.