சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார். அதைத்தொடர்ந்து, போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது கேள்விக்குறியான நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்தது. இன்று காலை வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் முகூர்த்தகால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்று தெரிவித்துடன், மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்படி நடத்துவது என்பது குறித்த வழிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி,
காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், 2 நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.
ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
எருது விடும் நிழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும். பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
வெளியூரில் வசிப்பவர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மத்தியில் ஜல்லிக்கட்டு பூட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.