புதுடெல்லி: நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் கொரோனாவை சமாளிக்கும் வகையில் மும்முரமாகத் தயாராகி வருகின்றன.
சில மாநிலங்கள், பெரிய ஸ்டேடியங்களை கொரோனா வைரஸ் தொற்றியோரை தனிமைப்படுத்துவதற்கான இடங்களாகப் பயன்படுத்தும் வகையில் தயார்செய்து வருகின்றன.
இதுவரை கொரோனா நோயாளிகள் கண்டறியப்படாத மாநிலங்கள்கூட இந்த விஷயத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக அஸ்ஸாம் மாநிலத்தைக் கூறலாம்.
அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவைரஸ் தொற்று நோயாளிக் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அம்மாநிலத்தில் அமைந்த இந்திரா காந்தி தடகள ஸ்டேடியம் என்ற பெரிய ஸ்டேடியத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான இடமாக பயன்படுத்துவதற்கு தயார் செய்து வருகிறது அம்மாநில அரசு.
மொத்தம் 1000 நபர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த ஸ்டேடியத்திற்கு அருகிலேயே 200 மருத்துவர்கள் தங்கும் வகையில் வாடகை வீடுகளை ஏற்பாடு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளது அம்மாநில அரசு.