டில்லி:
மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில் இத்தேர்வின் வினா தாள் மற்றும் அதற்கான விடைகள் சமூக வலை தளங்களில் கசிந்தது. இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால் தங்களது வாழ்க்கை பாதித்துவிட்டதாகவும், வினாத் தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆயிரகணக்கான வேலையற்ற இளைஞர்கள் டில்லியில் கடந்த 28ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்எஸ்சி அலுவலகம் முன்பு நடக்கும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமலும், மேலும் கூட்டம் கூடுவதை தடுக்க முடியாமலும் போலீசார் தவித்து வருகின்றனர்.
உ.பி., பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் செல்ல மறுத்து வருகின்றனர். ஹோலி பண்டிகை தினத்தில் கூட அவர்கள் வீடு திரும்ப மறுத்துவிட்டனர். இந்த போராட்டம் குறித்து சமூக வலை தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. எனினும் இந்த பிரச்னையை மீடியாக்கள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. இந்த தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களின் ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர டில்லி போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக அந்த பகுதியில் குடிநீர் விற்பனை செய்யும் நிலையத்தை மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதியுறும் சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கழிப்பிடங்களையும் போலீசார் மூடிவிட்டனர். போராட்டத்தில் ஈ டுபட்டுள்ள மாணவர்களை வெளியேற்றவும், மேலும் கூட்டம் சேராமல் தடுக்கும் வகையில் நேரு ஸ்டேடியம் வரையிலா டில்லி மெட்ரோ போக்குவரத்தை நிறுத்தவும், இன்டர்நெட் சேவையை துண்டிக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர், எனினும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.