சென்னை:

மிழகத்தில் உள்ள சுவை மிகுந்த இனிப்பு வகைகளில்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு தனி இடம் உண்டு. தற்போது, இந்த பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்திய அரசு கடந்த 1999 ம் ஆண்டு பல வகையான பொருட்களை அங்கீகரிக்கும் வகையில் புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய புவிசார் அடையாளம் தரக்கூடிய பொருளாக இருக்க வேண்டும். மேலும்,  அந்த பகுதிகளின் பாரம்பரிய பொருட்களாகவும் இருக்க வேண்டும்.

இதுபோன்ற பாரம்பரியம் மிக்க  பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது. புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் பாரம்பரியமான 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், தற்போது  32வது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்து  உள்ளது.

1940 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவாவுக்கு என  தனி சுவையுண்டு,  புவிசார் குறியீடு  கிடைத்ததன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது .