திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் கொடியேற்றத்தை கண்டு தரிசித்தனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (வெள்ளிக்கிழமை ) காலை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என்றும் வைகுண்டா வைகுண்டா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டின் திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர், தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு, இன்று காலை மேஷலக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது.
திருவிழாவையொட்டி, மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
மோட்சம் அருளும் காயாரோகணேஸ்வரர் விழாவின் 2-ம் நாளான நாளை (19-ந்தேதி) மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 20-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 21-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும் (கருடசேவை வைபவம்) , 22-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 24-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.
ஏப்ரல் 25 -ம் தேதி நம்பெருமாள் காலை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவமும் நடைபெறுகிறது. மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. ன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், மாநகராட்சி சார்பில் கழிவறை, குடிநீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
இந்த திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்று வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.