தங்களது பூர்வீக நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி இரணைதீவு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் இன்று வெள்ளைக்கொடி போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான இரணைதீவு பகுதியில் அந்நாட்டு கடற்படை முகாம் அமைத்துள்ளது. முகாமுக்காக மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீட்க கடந்த ஒருவருடமாக அப்பகுதி தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று போராட்டம் துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது.

இதைக் குறிப்பிடும் வகையில்,  இரணைதீவு மக்கள் பல படகுகளில் இன்று காலை வெள்ளைக்கொடிகள் ஏந்தியபடி படகுகளில் இரணைதீவுக்குச் சென்றனர்.

தங்களுடைய காணிகளைப் பார்ப்பதற்காகவும் அவற்றை விடுவிப்பது தொடர்பாக கடற்படையுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்காகவும் அருட்தந்தை, சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்பினர், ஊடகவியலாளர்களோடு  படகுகளில் இரணைமடுவை நோக்கி அம்மக்கள் சென்றனர்.

“எங்களது வாழ்வாதாரத்துக்காக முழுமையாக  மீன்பிடித்தல்,  விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை நம்பியிருக்கிறோம். எங்களது பகுதியில் கடற்படை ஆக்கிரமித்திருப்பதால் எங்களால் எந்தத் தொழிலும் செய்ய முடியவில்லை. ஆகவே எங்களது நிலங்களை எங்களிடம் கடற்படை ஒப்படைக்க வேண்டும்” என்றார்.