ர்பன்

லங்கை – தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கட் வித்தியாசத்தில் ஒரு சஸ்பென்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா நாட்டின் டர்பன் நகரில் இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 225 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணியால் முதல் இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்ரிக்கா 44 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது.

தென் ஆப்ரிக்க அணி இரண்டாம் இன்னிங்சில் 259 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. கடைசி 8 ரன்களில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கட்டுகளை இழந்தது. இலங்கை அணியின் புதுமுக வீரர் எம்புல்டெனியா 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். விஸ்வா பெர்னாண்டோ 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி இலக்காக 304 ரன்களுடன் இலங்கை அணி களமிறங்கியது. போட்டியின் 3ஆம் நாளான நேற்று மாலை இலங்கை அணி 3 விக்கட்டுகளை இழந்து 83 ரன்கள் எடித்திருந்தது. இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய போது இலங்கை அணிக்கு வெற்றி பெற 221 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் விக்கட்டுகள் மள மள என சரியவே இலங்கை அணி சற்றே அச்சம் கொண்டது.

அதுவரை பொறுமையாக ஆடி வந்த குஷால் பெரேரா திடீரென தனது அதிரடி ஆட்டத்த்தை தொடங்கினார். அப்போது இலங்கை அணி 9 விக்கட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. குஷால் பெராரேவுடன் கடைசி ஆட்டக்காரராக விஸ்வா பெர்னாண்டோ இணைந்தார். பெரேரா சிக்சர், பவுண்டரி என விளாசி ஆட ஆரம்பித்தார். பெரேரா 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் எடுத்து 153 ரன்களின் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி 86.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்கா அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வென்றது. சுமார் 7 ஆண்டுகள் கழித்து தென் ஆப்ரிக்க அணியை இலங்கை அணி இவ்வாறு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்/

இந்த டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் மட்டும் உள்ளதால் தென் ஆப்ரிக்கா அடுத்த போட்டியை வென்றால் மட்டுமே தொடர் டிராவில் முடியும். தென் ஆப்ரிக்க அணி அடுத்த போட்டியில் டிரா அல்லது தோல்வி அடையுமானால் இலங்கை அணி தொடரை வெல்லும்.